கொரோனா வைரஸ்- அமெரிக்காவில் 4 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு

332 0

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகளவில் அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினமும் பலி எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி 2010 பேர் பலியான நிலையில், அதற்கு அடுத்த நாட்கள் உயிரிழப்பு விகிதம் இரு மடங்கு ஆனது.
அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873 ஆக அதிகரித்து, பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 4076 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 1,89, 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை பேசும்போது, அடுத்து வரும் இரண்டு வாரங்கள் நாட்டிற்கு மிக மிக வேதனையான வாரங்கள் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.