வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

257 0

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

குறித்த அறிவிப்பில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை ஒரு நோயாளி மட்டுமே இனம் காணப்பட்டுள்ளார். ஆயினும் இந்நோய் எமது மாகாணத்தில் பரவாது இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் வடக்கு மாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய்
பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இது பற்றிய ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இவ்விடயம் சம்பந்தமான தகவல்களை வழங்கவும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் 24 மணி நேரமும் இயங்கும் பின்வரும் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 021 222 6666 மற்றும் 021 221 7982 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தாங்கள் வீடுகளில் இருக்கும்போது தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அவசர மருத்துவ நிலை ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டுமாயின் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தாங்கள் ஏதாவது வைத்தியசாலையில் கிளினிக்குக்கு செல்பவராயின் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளது.

நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் விபரத்தைத் தெரிவிப்பதன் மூலம் இச்சேவையினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வைத்திய சாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிடப்பட்ட அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியமுடியும்.

தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்வதாயின் அம்மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களது வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

உங்கள் பிரதேசத்தில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறியவேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். இச்சேவையை வழங்குவதற்குத் தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோமீற்றர் ஒன்றிற்கு ஐம்பது (50) ரூயாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில தனியார் மருந்தகங்கள் இச்சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

இச்சேவையினை வழங்குவதற்கு இதுவரை பதிவுசெய்யப்படாத மருந்தகங்களும் முன்வந்தால் தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்களது விபரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.