வீட்டிலிருந்தவாறே நோயாளி வைத்தியருடன் தொடர்புகொள்ள புதிய முறை அறிமுகம்

321 0

 வீட்டிலிருந்தவாறே நோயாளியொருவர் தனக்கு வேண்டிய வைத்தியருடன் தொடர்புகொண்டு தனது தேவைகளை நிறைவேற்ற செயலியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது வினைத்திறனாகும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளரும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரண்டசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொலைபேசியூடாக நோயளர்களுக்குரிய கிளினிக் வசதிகளை செயற்படுத்துவதற்கு அரச மருத்தவ அதிகாரிகள் சங்கம் ஒரு முன்மொழிவினை சுகாதார அமைச்சுக்கு வழங்கியிருந்தது.

அந்த முன்மொழிவின் பிரகாரம் ஓடக் ; என்கின்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியின் முன்னிலையில் தொலைபேசியூடாக நோயளர்களுக்குரிய கிளினிக் என்ற செயன்முறையை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அறிமுகப்படுத்தியிருந்தோம்.

இந்த செயன்முறை மூலம் நோயாளர்கள் நேரடியாக கிளினிக்கிற்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் குறிப்பிட்ட செயலியின் மூலம் தொடர்புகொண்டு தமக்குத் தேவையான வைத்தியரை தொடர்புகொள்ள முடியும்.

இதன் மூலம் அவர்கள் குறித்த வைத்தியருடன் காணொளி மூலம் உரையாடி நோயாளிக்கு உள்ள பிரச்சினையை கூறமுடியும்.

இதன்மூலம் நோயளர்களின் பிரச்சினைகளை வைத்தியர் அறிந்துகொண்டு நோயர்களுக்கான அறிவுரைகளையும் மருந்துகளுக்கான வைத்தியரின் மருந்துச்சிட்டையும் தொலைபேசி செயலியின் மூலம் உரியவர்களுகளுக்கு அனுப்பி வைக்க முடியும்

இதன் பின்னர் குறித்த நோயாளி அந்த மருத்துவ சிட்டை அருகிலுள்ள மருந்தகங்களிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த முறையானது மிகவும் வினைத்திறனாக செயற்பட்டுள்ளமையால் சகல வைத்தியசாலைகளிலும் இதனை அறிமுகப்படுத்தும்படி சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பணித்துள்ளார்.

அமைச்சரின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் நோயாளர்கள் ஒன்று கூடுவதை தடுக்க முடிகின்றது. இதனால் கொரோனா வைரஸ் ஆனது இன்னொருவரில் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க முடியும்.

இந்த செயற்பாடானது மிகவும் வினைத்திறனாக செயற்படும் பட்சத்தில் நாம் இன்னும் ஓரிரு நாட்களில் அகில இலங்கை ரீதியில் இதனை செயற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.