சுனாமியை விட பெரும் அச்சுறுத்தல்- கொரோனா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

306 0

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றும், அது சுனாமியை விட பெரும் அச்சுறுத்தல் என்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒவ்வொரு துறை அலுவலர்களிடமும் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார். பின்னர், கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாகவும், வேகமாகவும் பரவும் நிலையில் கேரள மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 17-ந்தேதிக்கு பிறகு தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகள் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து 50 ஆயிரத்து 583 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள்.

எனவே, நாம் மிகவும் எச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம். மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இதை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலக பொது சுகாதார அமைப்புக்கும், இந்திய சுகாதார துறைக்கும் விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இந்த கொரோனா வைரஸ். அத்துடன் இது, மனித குலத்துக்கே எதிராக உருவெடுத்துள்ள உயிர்க்கொல்லி. சுனாமியை காட்டிலும் பெரும் அச்சுறுத்தலாக இந்த வைரஸ் உள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே, இதை தடுக்கும் பணியை தொடங்கி விட்டோம். அதனால், பாதிப்பை பெரும் அளவில் குறைத்து விட்டோம். அதேநேரத்தில் தமிழகம் 3-வது கட்டத்தை நெருங்கி உள்ளது. கவனக்குறைவாக இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே மக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.