இத்தாலியில் ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவு பெற இருந்த ஊரடங்கு உத்தரவு 12-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.சீனாவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் வியாபித்துள்ள கொரோனா வைரஸ், இத்தாலியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 11,591 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது. இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம் நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.