அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றியீட்டியமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே வலுவான நாடு என அவதானிக்கப்படுகின்ற அமெரிக்காவிலுள்ள மக்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படியே, ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் அமெரிக்காவினால் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
அமெரிக்காவினால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டி அவர், அந்த யோசனையை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த விடயத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்பட கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.