ஜல்லிக்கட்டு நடத்த டெல்லி சென்று போராடுவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அவனியாபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்று ஆதரவு திரட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இருகட்சிகளுமே தமிழகத்தை கொள்ளையடிக்க வந்த கட்சிகள். எனவேதான் கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தே.மு.தி.க. இணைந்தது. ஆனால் அதனை மக்கள் ஏற்கவில்லை.
அதன் காரணமாகத்தான் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நான் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்காதது ஏன் என பலரும் கேட்கின்றனர். ஏன்? அங்கு சென்று ஆஜர் ஆகவேண்டுமா?
நான் முருக கடவுளை வணங்குபவன். முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று மீண்டும் பணிகளை கவனிக்க வேண்டுவேன். அவனியாபுரத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த தி.மு.க. போராடும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதனை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமே தி.மு.க.தான். ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த நான் டெல்லி வரை சென்று போராட்டம் நடத்துவேன்.
இடைத்தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாக இருந்தபோது அதனை ஏன் செய்யவில்லை. மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க.தான். எனவே இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.