முல்லைத்தீவு மாவட்டத்தில் 355 பணியாளர் வெற்றிடம்!

374 0

mullaithivu-8முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099  பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355  பணியாளர்கள்  வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின்கீழ் உள்ள  பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் என்பவனவற்றிலேயே குறித்த பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.  இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் 203 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 133 பணியாளர்களே சேவையில் உள்ளனர். இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் மட்டும் 70 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுகின்றது.

இதே போன்று பிரதேச செயலகங்களைப் பொறுத்தமட்டில் மேலதிக வெற்றிடம் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்தில் நிலவுகின்றது. இங்கு 144 பணியாளர்கள் தேவையானபோதும் 67 பணியாளர்கள் மட்டுமே சேவையில் உள்ளதால் 77 பணியாளர் வெற்றிடமும் , கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தில் 265 பணியாளர்கள் தேவையானபோதும் 202 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர் . இதனால் இங்கு 63 பணியாளர்களிற்கு வெற்றிடம் நிலவுகின்றது. அதேபோல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பணிகளிற்கு 210 பணியாளர்கள் தேவையானபோதும் 149 பணியாளர்கள் மட்டுமே சேவையில் உள்ளனர். இதனால் இங்கும் 61 பணியாளர் வெற்றிடம் நிலவுகின்றது.

இவ்வாறே ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு 147 பணியாளர்கள் தேவையானபோதும் 98 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளமையினால் 49 பணியாளர் வெற்றிடமாகவே உள்ளது. துணுக்காய் பிரதேச செயலகத்தின் பணிக்கு 130 பணியாளர் தேவையாகவுள்ளபோதும் 95 பணியாளர்களே பணியாற்றுவதனால் 35 பணியாளர்களிற்கான வெற்றிடம் நிலவுகின்றது. இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 1099 பணியாளர்கள் தேவையாகவுள்ள நிலையில் 744 பணியாளர்களே சேவையாற்றுகின்றனர். இதன் பிரகாரம் 355 பணியாளர்களிற்கான ஆளணிப் பற்றாக்குறையுடனே மாவட்ட நிர்வாக இயந்திரம் நகர்கின்றமை குறித்த புள்ளி விபரத்தின் பிரகாரம் சுட்டிக்காட்டப்படுகின்றது.