யாழில் கைகோர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

438 0

10532911671111நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதனூடாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ள கைகோர்ப்பு எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கை கோர்ப்பு எனும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனங்களிற்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவோம் எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைவாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் கை கோர்ப்பு எனும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் வடக்கு மற்றும் தெற்கிற்கிடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உதவிச் செயலாளரான அனுர தலைமையில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அரச அலுவலகர்கள் நாற்பது பேர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த இவர்கள் யாழ் அரசாங்க அதிபர் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் தங்கியிருந்து தமிழ் மக்களின் பண்பாடு, உணவுமுறை கலாசாரம் உள்ளிட்டவற்றை அறியவுள்ளதுடன் யாழ் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.