தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் திட்டத்துடனே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை முழு வீச்சில் நிறுவிவருகின்றது.
ஆசையே துன்பத்தின் அடிப்படை என்று போதித்த கௌதம சித்தார்தரின் வழி நடக்கும் சிங்கள பௌத்த மடாதிபதிகளின் மண்ணாசையே இலங்கைத் தீவின் இரத்த சரித்திரத்தின் ஊற்றுக்கண்ணாகும்.
இலங்கைத் தீவு முழுவதுமே சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் மூழ்கி முக்குளித்த சிங்கள பௌத்த மடாலயங்களில் இருந்து இயக்கப்படும் அரசின் செயற்பாடுகள் அனைத்தும் அதை நோக்கியதாகவே அமைந்துள்ளது.
எமது தாயக நிலமானது எமது தேசிய வாழ்விற்கும் தேசிய தனித்துவத்திற்கும் ஆதாரமானது. அதனால்தான் காலத்திற்கு காலம் சிங்கள தேசத்தை ஆள்பவர்களது பிரதான இலக்காக அது இருந்துவருகின்றது. அதனை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிட முடியாது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் அடங்காத மண்ணாசையின் அடிப்படையில் தோற்றம்பெற்றதே எமது மண் மீட்பு போராகும். தமிழர்களுக்கு சொந்தமான வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான எமது நிலமே எமது வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமாகும். அதனை நிலைநிறுத்தவே ஐம்பதாயிரத்திற்கு மேலான மாவீரர்கள் தமது இன்னுயிரை ஈகம் செய்துள்ளார்கள்.
அந்நிய காலனித்துவத் தலையீட்டின் அடிப்படையிலமைந்த அந்நியர் மேலாதிக்கம் நிலவியபோது தமிழர்களாகிய நாம் எமது வரலாற்றுத் தாயகத்தின் மீதான இறையாண்மையை இழந்த போதிலும் இனரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கவில்லை. மாறாக ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களரிடம் ஆட்சி அதிகாரங்கள் கைமாறிய பின்னரே தமிழர்களாகிய நாம் இன ரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டோம். அதற்கு ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமே மூல காரணமாகும்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்வினையாக தமிழர்களின் கைகளில் ஆயுதங்கள் ஏந்தப்பட்ட கணத்தில் நிறுத்தப்பட்டிருந்த நில ஆக்கிரமிப்பானது ஆயுத மௌனிப்புடன் முழுவேகம் பெற்றுள்ளது. ஆயுத பலத்தினடிப்படையிலான இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்துள்ள தமிழர் தாயகமெங்கும் அத்துமீறி புத்தர் சிலைகளை நிறுவியும் விகாரைகளை அமைத்தும் வருகின்றது சிங்கள அரசு.
அதன் தொடர்ச்சியாகவே அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் – மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா – துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிட நிர்மாணப் பணிகளும் அமைந்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் குவாண்டுன் பௌத்த சங்கத்தினால் சிறிலங்காவின் பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ள 20.24 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு, வடக்கு-கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளமையானது இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் சதித்திட்டத்தின் பாதையை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்துவந்த தமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்றுதான் சிங்கள மக்களும் நிம்மதியாக வாழ முடியும்.
இந்த வரலாற்றுப் புரிதலை சிங்கள பௌத்த பேரினவாத அரசு புறக்கணித்து தனது பௌத்த விரிவாக்கத்தினை தொடருமேயானால் சிங்கள தேசம் அதன் விளைவுகளை அறுவடை செய்ய தயாராக இருப்பது அவசியம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
ஆசிரியர்.
குறியீடு இணையம்.