2-வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் – ஊடகங்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்

330 0

201611120329176437_civil-rights-a-major-concern-on-second-day-of-anti-trump_secvpfஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி உறுதி செய்யப்பட்டதில் இருந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, பாஸ்டன், கலிபோர்னியா, கொலராடோ, சியாட்டில் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டில் நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன. கலிபோர்னியா நகரம் ஒன்றில் 40 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 3 அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

போர்ட்லேண்ட் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது. ஒரேகானிலும் வன்செயல்கள் நடந்தன.மின்னாபோலிஸ் நகரில் நடந்த பேரணி, போராட்டத்தால் மாகாணங்களுக்கு இடையேயான சாலையின் இருவழியிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

பிலடெல்பியா நகரில் சிட்டி ஹால் முன்பு திரண்ட மக்கள் “டிரம்ப் எங்கள் ஜனாதிபதி இல்லை”, “அமெரிக்காவை எல்லாருக்கும் பாதுகாப்பான நாடாக மாற்றுங்கள்” என்பவை போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பால்ட்டிமோர் நகரில் அமைதியான முறையில் பேரணி நடந்தது. இருப்பினும் போக்குவரத்து தடைப்பட்டது. சிகாகோ நகரில் டிரம்ப் டவர் முன்பாகவும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டங்களுக்கு டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில், “இப்போதுதான் ஜனாதிபதி தேர்தல் மிகவும் வெளிப்படையாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் தொழில் ரீதியிலான போராட்டக்காரர்கள், ஊடகங்களால் தூண்டப்பட்டு போராட்டங்கள் நடத்துகின்றனர். இது நியாயம் அற்றது” என குறிப்பிட்டுள்ளார்.