விமலின் வீட்டில் உயிரிழந்த இளைஞனின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

320 0

vimal-2பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி அழைப்புக்கள் சில தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.நீதிமன்ற உத்தரவுப்படி உயிரிழந்த இளைஞனின் தொலைபேசியில் பதிவுசெய்யப்படடிருந்த சில இலக்கங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் இருக்கவில்லை என்பது உறுதியாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரையில் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படவில்லை என்பதுடன், இளைஞனின் உடல் பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் நாம் இது தொடர்பில் வினவுவதற்காக களுபோவில வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, பரிசோதனை அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பதனால் அது தொடர்பில் எதுவும் கூறமுடியாது என்று பதில் வழங்கிய பெண் அதிகாரி ஒருவர் உடனே தொலைபெசி அழைப்பையும் துண்டித்து விட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் கடந்த 26ம் திகதியன்று இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நபர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகனான விபுதி விஷ்வஜித் வீரவன்சவுடன் நெருங்கிய தொடர்புடைய நண்பர் என்பது தெரியவந்தது.

விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் குறித்த இளைஞர் கடந்த 25ம் திகதியும் அங்கு சென்றுள்ளதுடன், அன்றிரவு அங்கேயே தங்கியிருந்துள்ளார்.

எவ்வாறாயினும் மறுநாள் கண்விழிக்காத குறித்த இளைஞனை, வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை குறித்த இளைஞன் வீட்டிலிருந்து புறப்படும் போது சிறந்த உடல் நலத்துடனேயே இருந்ததாக உயிரிழந்த இளைஞனின் தாய் கூறியிருந்தார்.

ஹோகந்தர தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே லஹிரு ஜனித் திசாநாயக்க என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் தனக்கும் தனது மகனுக்கும் எதிராக சில இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

அத்துடன் மரணம் தொடர்பில் சில இணையத்தளங்கள் வெளியிடுகின்ற செய்திகளினால் தனது சிறுவர் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விமல் வீரவன்சவின் மகளான விமாஷா வி்ஷ்வாதரி தாயுடன் சென்று சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் தனியானதொரு விசாரணையை ஆரம்பித்திருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.