யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொதுச்சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 5வது நாளாக தொடர்கின்ற காரணத்தினால் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசம் திண்மக் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேட்டிற்கு உட்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே மாநகரசபை நிர்வாகமும், சுகாதார ஊழியர்களும் நிரந்தர நியமனம் தொடர்பான பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
யாழ்ப்பாண மாநகரசபையில் தற்காலிகமாக கடமையாற்றுகின்ற 127 சுகாதார ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனக்கோரி கடந்த திங்கட்கிழமையிலிருந்து யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணசபை அதிகாரிகளும் யாழ்ப்பாண மாநகரசபை நிர்வாகமும் இணைந்து சுகாதார ஊழியர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது 90 பேருக்கு படிப்படியாக நிரந்தர நியமனம் வழங்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநகரசபை சுகாதார ஊழியர்கள் சங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாண மாநகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்.மாநகரசபையின் சுகாதார ஊழியர்களின் நிரந்தர நியமனம் கோரிய போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.