வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்

320 0

alam-720x480கடலை நம்பி வாழ்க்கை நடாத்தும் வடக்கு மாகாண மீனவர்கள் பிரச்சனைக்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும், தாம் எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லையெனவும் மன்னார் மீனவர் சங்கத் தலைவர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மீனவ சங்கப் பிரதிநிதிகள் குழுவிற்கும், மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மன்னார், முள்ளிக்குளம், காயாக்குழி ஆகிய பிரதேசங்களில் தென்னிலங்கை மீனவர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதால் மன்னார் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

அவர்கள் குறித்த பிரதேசங்களில் மீன் பிடிப்பதைக்காட்டிலும், தங்களை அங்கே பதிவுசெய்து அங்கு நிரந்தரமாகக் குடியேறும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டு பகுதியினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் அங்கே பதற்றமான சூழலும் நிலவி வருகின்றது. இதனையடுத்து ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடு செய்யும் வகையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வருகை தராததால் சந்திப்பில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, எதிர்வரும் புதன்கிழமை இரு பகுதி மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது அமைதியைக் கண்டு அரசாங்கம் கூறும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் என நம்பிவிடாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.