ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்த மாணவன் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் கண்காணிப்பில்!

290 0

maithripala-sirisena01-1-696x385ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 17 வயதான பாடசாலை மாணவனை மூன்று வருடகாலம் சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாணவன் பெற்றோரின் பொறுப்பில் இருக்கும் போதே சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகள் அவரை கண்காணித்து வரவேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுவர் சீர்த்திருத்த பாடசாலை அதிகாரிகள் இந்த யோசனையை முன்வைத்த போது, மாணவனின் பெற்றோர் எந்த எதிர்ப்பையும் வெளியிடவில்லை என்பதால், நீதவான் அதற்கு அனுமதியை வழங்கினார்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்ட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இது குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்க மாணவனுக்கு மாலைதீவு பிரஜை ஒருவரின் உதவியும் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது எனவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.