மகிந்த ஆட்சியில் ஜீ. எஸ். பீ வரிச்சலுகையினை காத்துக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையே காணப்பட்டது அதுவா தற்போது இருக்கின்றது என நன்றாக சிந்தித்துப் பாருங்கள் என அமைச்சர் கபீர் ஹாசீம் பகிரங்கமாக கூறினார்.
வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று காரசாரமாக நடைபெற்று வருகின்றது. இதன்போது உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்,
நாடு தற்போது ஜீ. எஸ். பீ வரியை இழந்து பொருளாதார வீழ்ச்சியினை சந்திப்பதற்கு முதல் காரணம் மகிந்த ராஜபக்சவே அதனை யாரும் மறக்க வேண்டாம்.
ஆனால் கடந்த காலத்தினை போன்று இப்போது ஆட்சி நடைபெறவில்லை. மக்களை அடிமைப்படுத்தி தான்தோன்றித்தனமான முறையிலேயே கடந்த ஆட்சி நடைபெற்றது. அதனை முற்றிலும் மாற்றும் வகையிலேயே இப்போது வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் எதிர்ப்பார்ப்பு ஆகும். அதன் படி மக்களின் குறை நிறைகளை முறையாக அவதானித்து மக்களுக்கு எது வேண்டுமோ அதனையே நல்லாட்சி செயற்பாட்டுக்கு கொண்டு வருகின்றது.
நாட்டை சீரழிக்கும் வகையில் அமைக்கப்பட்டவற்றை சீர்திருத்தி கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் அந்த நிலையிலேயே தற்போது நாம் உள்ளோம்.
இப்போதைய காலகட்டத்தில் தூரநோக்கும் அபிவிருத்தியும் மிக முக்கியம் அதனை பெற்றுக் கொள்வது சவால் நிறைந்த ஒன்றாகும். அதனை மையப்படுத்தியே நாம் செயற்பட்டு கொண்டு வருகின்றோம்.மிக முக்கியமாக கடந்த ஆட்சியின் போது சிறிய வகையில் வியாபாரம் செய்தவர்கள் துன்ப நிலையினையே சந்தித்து வந்தனர்.
அவர்களையும் முன்னேற்றும் வகையிலேயே தற்போது வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் கபீர் ஹாசீம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை மகிந்த ஆட்சியினாலேயே நாடு தற்போது பல்வேறு வகையிலும் பின்தங்கி வருகின்றது என பல குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் முன்வைத்து உரையாற்றியமை சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.