கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த பல வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் அவசரகால திட்டங்களை உருவாக்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நிலை குறித்து அவுஸ்திரேலியா கவலையடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை அவுஸ்திரேலிய மக்களை வழமை போன்று நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது நீங்கள் கடைக்கு செல்லும்போது முகக்கவசத்தை அணிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள பிரென்டன் மேர்பி உதைபந்தாட்டப்போட்டிகளையோ சமூக நடவடிக்கைகளையோ தவிர்க்க வேண்டிய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியர்கள் வணிகவளாகங்களில் இருந்து டொய்லட் பேப்பர்களை திருடவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய பிரஜைகளிற்கு தடை
அவுஸ்திரேலிய அரசாங்கம் தென்கொரிய பிரஜைகள் நாட்டிற்குள் வருவதற்கு தடை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரஜைகள் தென்கொரியாவிற்கு செல்வது குறித்து சிந்திக்கவேண்டும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டேகுவிற்கு அவுஸ்திரேலிய பிரஜைகள் செல்லக்கூடாது என அரசாங்கம் கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளது.
இத்தாலியை விட ஐந்து மடங்கு அதிகமானவர்கள் தென்கொரியா செல்கின்றனர் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்
சுகாதார அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அறிக்கைகளின் பின்னரே பயணஎச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலிருந்து வருபவர்களை விட அதிகமானவர்கள் தென்கொரியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் வருவதை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலிருந்து வருபவர்களை விட தென்கொரியாவிலிருந்து வருபவர்களை சோதனையிடுவது கடினம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனா ஈரான் குறித்த தடைகளும் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை இத்தாலியில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.