ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள், 7 போலீஸார் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டஸ் மாகாணத்தில் தலிபான்கள் இன்று (புதன்கிழமை) தாக்குதல் நடத்தினர். இதில் ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்கள் 12 பேரும், 7 போலீஸாரும் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் – ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுகால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.