சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் பௌத்த துறவிகள்- சத்தியலிங்கம்

238 0

பௌத்த, சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவு செய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வன்னி தேர்தல் தொகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில், தற்போது பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்குமாறு பௌத்த துறவிகள் கோரி வருவதாக அறிய முடிகின்றது.

பல்லின இனக்குழுமங்கள் வாழும் இலங்கைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் பல செய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

தேர்தலுக்கு பின்னராக பத்திரிகைகளில் வெளிவந்த இலங்கையின் வர்ண வரைபடம் தெளிவான செய்தியை கூறியுள்ளது.

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பொதுஜன பெரமுனவிற்கு குறைந்தளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.