தன் மனைவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற பீதியில் லிதுவேனியாவில் கணவன் ஒருவர் மனைவியை குளியலறையில் அடைத்து வைத்தது பரபரப்பாகியுள்ளது.
போலீஸ் தலையிட்டு கடைசியில் மனைவியை விடுவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கணவரும், வயது வந்த இரண்டு வாரிசுகளும் சேர்ந்து இந்தப் பெண்ணை பாத்ரூமில் அடைத்து வைத்து வெளியே விடாமல் தாழ்ப்பாள் போட்டுள்ளனர், அந்தப் பெண் தனக்கு கரோனா வைரஸ் இருக்கும் போலிருக்கிறது என்று கூறியவுடன் பீதியில் இவ்வாறு செய்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருடன் தான் பேசியதால் தனக்கு தொற்று இருக்கலாம் என்று அந்தப் பெண் அசட்டுத் தனமாகக் கூற அது வினையில் முடிந்தது. பிறகு நாங்கள் வந்து பெண்ணை மீட்டு பரிசோதனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பினோம், அவருக்கு கரோனா தொற்று இல்லை.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பால்டிக் நாடான லிதுவேனியாவில் 2.8 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர், இதுவரை ஒரேயொருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு அதிக பலி ஏற்பட்ட இத்தாலியிலிருந்து வந்த 39 வயது நபருக்கு கரோனா பீடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தாலியில் கரோனா பலி எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.