தங்க விருதைப் பெற்றது யாழ்.மாவட்டச் செயலகம்!

265 0

யாழ்.மாவட்டச் செயலகம் சிறந்த செயலாற்றுகைக்காக தங்க விருதைப் பெற்றுள்ளது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் க.மகேசன் கலந்துகொண்டு 97 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற யாழ்.மாவட்டச் செயலகத்திற்கான தங்க விருதினைப் பெற்றுக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும், சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து கடந்த 28.02.2020 அன்று வழங்கப்பட்டது. இதன்போதே யாழ் மாவட்டச் செயலகத்துக்கு தங்க விருது வழங்கப்பட்டது.

நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகள் வினைத்திறனாக பேணப்பட்டமையினால் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு இவ்விருது கிடைத்ததாகவும் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் மாதாந்த மற்றும் ஆண்டு அறிக்கைகள் உரிய அமைச்சு மற்றும் திறைசேரிக்கு உரிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டதோடு அரச வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தியமையினை மதிப்பீடு செய்யப்பட்டு தங்கவிருது வழங்கப்பட்டதாகவும் யாழ். மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ஜே.கில்பேட் குணம் குறிப்பிட்டுள்ளார்.