ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பொதுத்தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிப்பார்.
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்தொதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை. பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் உதவி புரிகின்றார்கள்.
கட்சியின் தலைமைத்துவம் தொடக்கம் உறுப்பினர்கள் வரையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.