20 ஆண்டுகளாக பிச்சை எடுத்து ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 98 ஆயிரம் ரூபாயை சேர்த்து வைத்துள்ள பார்வையற்ற ஒருவர் தற்போது இந்த தொகைக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவது எப்படி? என்பது புரியாமல் திண்டாடி வருகிறார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள டேவாஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட சியா கிராமத்துக்கு தனது மனைவியுடன் அடைக்கலம் தேடிவந்தவர், சீத்தாராம்.
இருகண்களிலும் பார்வையிழந்தவரான சீத்தாராமுக்கு இங்கு எந்த வேலையும் கிடைக்காததால், கடைத்தெருவில் பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக பசி,பட்டினி இல்லாமல் வாழ்ந்து வந்ததுடன் எதிர்கால தேவைக்காக சிறிது பணத்தையும் சேமித்து வைத்திருந்த சீத்தாராமின் வாழ்க்கையில் பேரிடிபோல, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒரு செய்தி வந்து சேர்ந்தது.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளில்தான் மாற்ற முடியும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அறிந்து பதற்றம் அடைந்த சீத்தாராம், தன்னிடம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக உள்ள 98 ஆயிரம் ரூபாயை மாற்ற வழியறியாமல் இங்குள்ள சியா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்போது முறையிட்டுள்ளார்.
சீத்தாராமின் பெயரில் வங்கி கணக்கு இல்லாததால், வங்கி அதிகாரிகளை அணுகி அவருக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய முடியுமா? என ஆலோசிக்கவுள்ளதாக பஞ்சாயத்தார் தெரிவிக்கின்றனர்.