நிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி

312 0

201611111116487774_tamil-nadu-government-will-publish-a-white-paper-on-the_secvpfநிதி நெருக்கடி பற்றி நீதிபதிகள் கருத்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் நிதிச் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.

நீதிபதிகளின் கருத்தில், நீதித்துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க மறுப்பதால் ஏற்பட்ட கவலையும், வேதனையும், கோபமும் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், நீதிபதிகளின் கருத்துக்கள் எந்த வகையிலும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 52,431 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கான வட்டியாக மட்டும் நடப்பாண்டில் ரூ.21,215 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வட்டி கட்டவும், மற்ற செலவுகளுக்கும் பணம் இல்லாத நிலையில், நடப்பாண்டில் ரூ.41,085 கோடி கடன் வாங்க வேண்டிய நிலையில் தான் தமிழக அரசு உள்ளது.

நடப்பாண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ.86,537 கோடி தான் எனும் போது, அதில் பாதியளவுக்கு கடன் வாங்க வேண்டியிருந்தால் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2011-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் நேரடியாக ஒரே ஒரு அனல் மின்திட்டத்தைக் கூட திட்டமிட்டு, செயல்படுத்த முடியவில்லை; ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட அறிவித்து அமைக்க முடியவில்லை.

அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 600-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாததால் கிடப்பில் போடப் பட்டிருக்கின்றன. தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிதி நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் எதையும் காட்ட முடியாது.

தமிழகம் திவாலான மாநிலம் என்று அரசு அறிவிக்கப்போகிறதா? என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பியுள்ள நிலையில், அதற்கு விளக்க மளிக்கும் வகையில் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.