ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுக்கடங்காத கூட்டம்: தாமதம் ஆனதால் பொதுமக்கள் அவதி

338 0

201611111223149951_currency-exchange-public-people-awadhi-for-atm-centre-heavy_secvpfதமிழகம் முழுவதும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் இயங்குவதில் தாமதம் ஆனதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடெங்கும் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அரசுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாளான நேற்று மட்டும் ரூ.480 கோடிக்கு பழைய நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம் அளவுக்கு மட்டுமே ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று உச்சவரம்பு கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது.

சென்னை ரிசர்வ் வங்கி கிளை மற்றும் தபால் நிலையங்களிலும் மக்கள் இன்று நீண்ட வரிசையில் நின்று புதிய ரூபாய் நோட்டுகள் வாங்கிச் சென்றனர். இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர்.

இதற்கிடையே புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்கு வசதியாக கடந்த இரு நாட்களாக ஏ.டி.எம். எந்திரங்களின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் ஏ.டி.எம். எந்திரங்களில் ரூபாய் நோட்டுகள் வைக்கும் பணி தொடங்கியது.

இன்று காலை 9 மணி வரை ஏ.டி.எம்.களில் ரூபாய் நோட்டுகளை நிரப்பும் பணி நடந்தது. 9.30 மணிக்குப் பிறகு ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

எனவே காலையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு கிடந்தன.

ஏ.டி.எம்.மில் புரோக்கிராம் மாற்றப்படாததாலும், பணம் நிரப்பப்படாததாலும் ஏ.டி.எம்.கள் திறக்கப்படவில்லை. காலை 10 மணி வரை பல ஏ.டி.எம்.கள் மூடப்பட்டு கிடந்தன.

சென்னையில் 90 சதவீத ஏ.டி.எம்.கள் இன்று காலை 9.30 மணி வரை செயல்படவில்லை. விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.கள் 11 மணி வரை திறக்கப்படவிலலை.

அறிவித்தப்படி ஏ.டி.எம்.கள் உரிய நேரத்தில் திறக்கப்படாததால் சென்னையில் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் இருந்து வெளியேறி வங்கிகளில் பணம் எடுக்க சென்றனர்.

இந்த நிலையில் 12 மணிக்கு பிறகு ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சென்னையில் 10 மணி அளவில் பாரிமுனை, அமைந்தகரை பகுதிகளில் ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டன. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துச் சென்றனர். அதுபோல ஏராளமானவர்கள் ஏ.டி.எம்.களில் பணம் டெபாசிட் செய்தனர்.

மாத சம்பளம் வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் அடிக்கடி தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்து செலவு செய்யும் பழக்கத்தில் உள்ளனர். அவர்களில் கணிசமானவர்கள் கடந்த இரு நாட்களை எப்படியோ சமாளித்திருந்தனர்.

மூன்றாவது நாளான இன்று தாக்குபிடிக்காத நிலையில் ஏ.டி.எம்மை தேடி வந்து விட்டனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் காலை முதலே மக்கள் அதிக அளவில் திரள ஆரம்பித்து விட்டனர்.

சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கட்டுக்கடங் காத கூட்டம் காணப்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தினார்கள்.

இதுவரை ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெறும் வகையில்தான் அவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவை ஆகி விட்டதால் அவை நிரப்பப்படவில்லை. புதிய ரூ500 நோட்டு இன்னும் தமிழ்நாட்டுக்கு வராததால் அவையும் நிரப்பப்படவில்லை.

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் சற்று சிறிய வடிவத்தில் இருப்பதால் அவற்றை நிரப்ப ஏ.டி.எம்.களில் சில மாறுதல்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. எனவே ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகளும் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்படவில்லை. எனவே இன்று ஏ.டி.எம்.களில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பொதுமக்களால் பெற முடியவில்லை.

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம்.களுக்கு வராததால் ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளை மட்டுமே ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்பப்பட்டிருந்தது. பொது மக்கள் அந்த பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து சென்றனர்.

2 ஆயிரம் ரூபாய்க்கு ரூ.100 நோட்டுகளாக கிடைத்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த பணத்தை எடுப்பதற்குள் பலருக்கும் போதும், போதும் என்றாகி விட்டது.

பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரங்களில் தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற முக்கிய மாற்றம் பல ஏ.டி.எம்.களில் இன்னும் செய்யப்படவில்லை. சில ஊர்களில் ரூ.50 நோட்டுகள் பெறுவதற்கான மாற்றம் செய்யப்படவில்லை.

இதன் காரணமாக சில இடங்களில் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. செயல்பட்ட ஏ.டி.எம்.களிலும் ரூ.50 நோட்டுகள் கிடைக்கவில்லை. ரூ.100 நோட்டுகள் மட்டுமே பெற முடிந்தது. இதன் காரணமாக ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்தவர்கள் கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்தியா முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் வங்கிகளுக்குள் 1 லட்சம் ஏ.டி.எம்.களும், வங்கிகளுக்கு வெளியில் பொது இடங்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் ஏ.டி.எம். களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏ.டி.எம்.களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முற்றுகையிட்டதால் பல ஏ.டி.எம்.களில் பணம் சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டது. அத்தகைய இடங்களில் உடனுக்குடன் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பினார்கள்.

ஆனால் ஒரே நேரத்தில் நாடெங்கும் பலரும் ஏ.டி.எம்.களை இயக்கியதால் நெட்வெர்க்கில் சுமை அதிகரித்தது. இதன் காரணமாக சில இடங்களில் ஏ.டி.எம்.கள் பழுதடைந்தன. அந்த கோளாறுகளை வங்கி ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் உடனுக்குடன் சரி பார்த்தனர்.

சில வங்கிகளின் ஏ.டி. எம்.கள் நெட்வொர்க் அழுத்தம் காரணமாக மிகவும் மெல்ல இயங்கின. இதனால் பணம் எடுப்பதில் பல இடங்களில் மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது.

வங்கிகள் மூலமாகவும், ஏ.டி.எம்.கள் மூலமாகவும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கத் தொடங்கி இருப்பதால் கணிசமானவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். என்றாலும் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விலகி பணத்தை கையாள்வதில் இயல்பு நிலை திரும்ப இன்னும் 3 வாரங்கள் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.