உலகிலேயே திறந்தநிலை பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக இந்தியாவை உயர்த்துவதே அரசின் நோக்கம் என ஜப்பான் நாட்டு தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்துப் பேசினார்.
பின்னர், இந்தியா – ஜப்பான் வர்த்தக அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பொருளாதார சீர்த்திருத்தத்தில் புதியபாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்தியாவை உலகிலேயே தலைசிறந்த திறந்தநிலை பொருளாதார நாடாக உயர்த்துவதுதான் எனது நோக்கம் என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் மேம்பாட்டுக்கான திட்டங்களில் தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. அவற்றை நிறைவேற்ற ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிறைய வாய்ப்புகளும் எங்கள் நாட்டில் கொட்டிக் கிடக்கின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எங்களது மேம்பாடு தொடர்பான முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்களில் அபார சாதனையை படைக்க விரும்புகிறோம்.
ஜப்பானின் வன்பொருள் அளித்துள்ள சக்தியைகொண்டு மென்பொருளில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. தொடர்ந்து இதுபோல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக திகழும் வாய்ப்புகளை உங்களுக்கு உருவாக்கி தருவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.