சிறீலங்கா தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – அதுல் கெசாப்!

287 0

keshap-mainஅமெரிக்காவின் அதிபராக ரொனால்ட் ட்ரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதிலும், சிறீலங்கா தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லையென சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ட்ரம்ப் அதிக வாக்குளைப் பெற்று அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறீலங்கா தொடர்பாக ஒபாமா அரசு எடுத்த நிலைப்பாட்டினை ட்ரம்ப் அரசாங்கமும் எடுக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,அமெரிக்காவைப் பொறுத்தவரை தேசிய வெளிவிவகாரக் கொள்கையொன்றுக்கு அமையவே செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட தூதுவர் அதுல் கேஷாப், அதனால் தேர்தலுக்குப் பின்னர் அதிபர் மாறினாலும், வெளிநாட்டுக் கொள்கைகள் மாறாது என குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்காவில்  மக்கள் எவ்வாறு தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தார்களோ அது போன்றே அமெரிக்க மக்களும் அமைதியான ஒழுங்குமுறையான அதிகார மாற்றத்திற்காக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 240 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த மிகச்சிறந்த ஜனநாயக நடைமுறை மக்களின் விருப்பினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் பெருமிதம் வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், ஜனநாயகத்தின் மீதான மக்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்றால் மிகையாகாது என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை என்பது அமெரிக்காவின் தேசிய நலன்களையும் அமெரிக்க தேசிய விழுமியங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க மக்களின் விழுமியங்கள் என்பது நிர்வாகங்கள் மாறுகின்றபோது மாறாது தொடர்ந்து உறுதியாகக் கடைபிடிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபராக இருப்பவர், வெளிவிவகார கொள்கை மீதான அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தாலும், அது எப்போதுமே அமெரிக்க மக்களின் விருப்பையும், நலன்களை விழுமியங்களைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.