தந்தையர் நாடும் தமிழீழமும்! – புகழேந்தி தங்கராஜ்

398 0

n114-696x30621வது நூற்றாண்டில் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட புதிய நாடுகள் என்கிற அந்தஸ்தை இதுவரை பெற்றிருக்கிற 4 நாடுகள் கிழக்கு திமோர், மொன்டெனேகுரோ, கொசோவோ மற்றும் தெற்கு சூடான். இந்த நான்கில் இந்த நூற்றாண்டின் முதல் சுதந்திர நாடு என்கிற பெருமைக்குரியது கிழக்கு திமோர்

மூன்று நூற்றாண்டுகள் போர்த்துக்கேயரின் காலனி நாடாகவும் கால் நூற்றாண்டுக் காலம் இந்தோனேசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டும் அவதிப்பட்ட கிழக்கு திமோர் 2002 மே மாதம் சுதந்திரம் பெற்றது. செப்டம்பரில் ஐ.நா. உறுப்பினர் ஆனது. இன்று அது இந்தப் பூவுலகின் 191வது நாடு.

ஈழத்தின் வரலாற்றில் நவம்பர் மாதத்துக்கு முக்கியத்துவம் இருப்பதைப் போலவே கிழக்கு திமோர் வரலாற்றிலும் நவம்பர் மறக்க இயலாதது. தலைநகர் டிலியில் 1991 நவம்பர் 12ம் தேதி நடந்த ‘சான்டாகுரூஸ் படுகொலை’ அதன் அடிமை வரலாற்றில் திருப்புமுனை. அந்தத் துயரதினத்தை நினைவுகூர்கிற விதத்தில் இன்றைய சுதந்திர கிழக்கு திமோரில் நவம்பர் 12ம் தேதி பொது விடுமுறை நாள்.

போர்த்துகேயர்கள் தங்கள் ஆதிக்கத்திலிருந்து கிழக்கு திமோரை விடுவித்தபோது எழுந்த அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி 1975ல் கிழக்கு திமோரை ஆக்கிரமித்தது இந்தோனேசியா. ஈழத்தில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதைப் போன்றே மிகையான ராணுவத்தைக் கிழக்கு திமோரில் குவித்து மக்களின் விடுதலை உணர்வை நசுக்கப்பார்த்தது இந்தோனேசியா.

ஈழத்துக்கும் கிழக்கு திமோருக்கும் எக்கச்சக்க ஒற்றுமை. ஒருபுறம் இந்தோனேசிய ராணுவம் முழுமையாக வெளியேறவேண்டும் – என்கிற குரல் ஓங்கி ஒலித்தது. ஆக்கிரமிப்பு ராணுவத்தை எதிர்த்து இளைஞர்கள் போராடினர். இன்னொருபுறம் கூலிக்குக் குரைப்பவர்களைக் களத்தில் இறக்கியது – இந்தோனேசியா. ‘இந்தோனேசியாவின் காலடியில்தான் கிழக்கு திமோரின் சுபிட்சம் இருக்கிறது’ என்கிற பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

‘இந்தோனேசியா நமக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கப் போகிறது…. அதிகாரப் பரவலைத் தரப்போகிறது…. சுதந்திரம் கிதந்திரம் என்றெல்லாம் முட்டாள்தனமாகப் பேசி அந்த சுபிட்சத்தை நாசமாக்கிவிடக் கூடாது’ என்றெல்லாம் மக்களுக்குப் போதித்தார்கள் இந்தோனேசியாவின் எடுபிடிகள்.

1991 அக்டோபர் 28ல் கோமஸ் என்கிற விடுதலை ஆதரவாளர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவைப் போற்றும் ‘மெமோரியல் சர்வீஸ்’ நவம்பர் 12ம் தேதி நடந்தது. தலைநகர் டிலியில் உள்ள சான்டாகுரூஸ் கல்லறைத்தோட்டத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். ஒட்டுமொத்த மக்களின் விடுதலை உணர்வைப் பிரதிபலிப்பதாக இருந்தது அந்தப் பேரணி.

பேரணியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் இளைஞர்கள். விடுதலை உணர்வை வலியுறுத்தும் முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த எழுக தமிழ் பேரணியைப் போலவே சான்டாகுரூஸ் நோக்கி நகர்ந்த அந்தப் பேரணியிலும் ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ ‘காணாமல் போனவர்கள் எங்கே’ என்கிற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் இருந்தன.

ராணுவ நெருக்கடிகளுக்கிடையே அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் பெருந்திரளாகக் கூடிவிட மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணுவத்தை. அந்த மக்கள் எழுச்சி அச்சுறுத்தியது. அவசர அவசரமாக கல்லறைத் தோட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துருப்புகள் குவிக்கப்பட்டன.

பேரணி கல்லறைத் தோட்டத்தை நெருங்கியதும் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் இறங்கியது ராணுவம். பேரணியின் முன்னணியில் வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தியது. தப்பி ஓட முயன்றவர்களை விரட்டிச் சென்று சுட்டது. சான்டாகுரூஸ் கல்லறைத் தோட்டத்தின் உள்ளும் வெளியும் ரத்தத்தால் நனைந்தது.

சான்டாகுரூஸ் கொலைவெறித் தாக்குதல் தொடர்பான காணொளி (வீடியோ பதிவு) ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான கல்லம் மேக்ரேவின் ஆதாரங்களையொத்த அரிய ஆவணம்.

கொலை வெறித் தாக்குதலுக்கு அஞ்சாமல் குண்டடி பட்டு வீழ்ந்திருப்பவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிற இளைஞர்களை அந்த வீடியோ பதிவில் பார்க்கிற எவருக்கும் தம் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கப் போராடிய விடுதலைப் புலிகளின் நினைவுதான் வரும்.

சான்டாகுரூஸ் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் 250 பேர். மெமோரியல் சர்வீஸ் நிகழ்ச்சியை நேரில் பார்க்க வந்திருந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இருவர் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகள் வாயிலாக அந்தப் படுகொலை வெளி உலகுக்குத் தெரியவந்தது. அதுதான் கிழக்கு திமோரின் சுதந்திரத்தை உறுதிசெய்த பொதுவாக்கெடுப்புக்கு வழிவகுத்தது. அவ்வளவு சீக்கிரத்தில் அது நடந்துவிடவில்லை. சான்டாகுரூஸ் படுகொலை நடந்த 8 ஆண்டுகள் கழித்தே பொதுவாக்கெடுப்பு நடத்த முடிந்தது.

இலங்கையைப் போலவே தான் செய்த படுகொலைகளை மூடிமறைக்க இந்தோனேசியாவும் தலைகீழாய் நின்றது. சர்வதேசத்தின் கண்களில் மண்ணைத் தூவியது. கிழக்கு திமோர் மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே 1999ல் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. தீர்மானித்தது. அதையும் குறிப்பிட்ட நாளில் நடக்கவிடாமல் நெருக்கடி கொடுத்தது இந்தோனேசியா.

கிழக்கு திமோர் பொதுவாக்கெடுப்பில் முன்வைக்கப்பட்டது இரண்டே கேள்விகள்தான்! இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக இருப்பதா? சுயாட்சி அதிகாரம் பெற்ற இந்தோனேசிய மாகாணமாக இருப்பதா? இரண்டில் ஒன்றைத் தீர்மானிப்பதற்கான அந்தப் பொதுவாக்கெடுப்பு 1999 ஆகஸ்ட் 30ம் தேதி நடந்தது.

பொதுவாக்கெடுப்பு தொடர்பாக போர்ச்சுகல் – இந்தோனேசியாவுக்கு இடையில் ஏறபட்ட உடன்பாட்டில் ஒரு நயவஞ்சகப் பின்னிணைப்பு இருந்தது. ஒன்றுபட்ட இந்தோனேசியாவுக்குள் சிறப்பு சுயாட்சி அதிகாரம் பெற்ற கிழக்கு திமோர் பிராந்தியம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதைக் கனவொழுக வர்ணித்தது அது.

கிழக்கு திமோர் மாகாணத்துக்கு தனி காவல்துறை – நீதிமன்றங்கள் பாரம்பரிய சட்டதிட்ட அமல் அந்த மாகாண மக்களுக்கே நிலங்களின் மீதான உரிமை – என்றெல்லாம் அந்தப் பின்னிணைப்பு உறுதியளித்தது. உள்நாட்டுப் போரால் சீரழிந்த கிழக்கு திமோரை மீளக் கட்டியெழுப்ப மானியங்களும் சலுகைகளும் வாரி வழங்கப்படும் – என்று தூண்டில் போட்டது அது.

போராடுபவர்களைக் கொன்று குவித்துவிட்டு அவர்களது வாரிசுகளுக்கு பிரியாணி பொட்டலம் கொடுக்கிற கதை இது.

கிழக்கு திமோரில் விடுதலை வீரர்கள் மட்டுமே இருக்கவில்லை இந்தோனேசிய ஏஜென்டுகளும் இருந்தார்கள். நடந்த மோதல்களையும் இழந்த உயிர்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்று ஒப்பாரி வைத்தார்கள் அவர்கள். இப்போது ஈழத்தில் எழுகிற நல்லிணக்கப் பிலாக்காணங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

‘வாழ்வோ சாவோ – ஒன்றுபட்ட இந்தோனேசியாவுக்குள் தான்’ என்றார்கள் ஏஜென்டுகள். ‘சுதந்திரத்தைக் காட்டிலும் சலுகைகளோடும் சகலசௌபாக்கியங்களோடும் வாழ்வதே முக்கியம்’ – என்கிற நச்சுப் பிரச்சாரம் கொடிகட்டிப் பறந்தது.

கேப்பையில் நெய் வடிகிறதென்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். எழுதப் படுகிற புதிய யாப்பில் பக்கத்துக்குப் பக்கம் தேனைத் தடவி நக்கச் சொல்வார்கள் – என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த யார் வேண்டுமானாலும் முயலலாம். அது நடக்கிற கதையா என்று பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்க்கிற இனம்தான் அழிவிலிருந்தும் இழிவிலிருந்தும் மீளமுடியும். கிழக்கு திமோர் மக்கள் அப்படித்தான் மீண்டார்கள்.

இந்தோனேசியா பிச்சைபோடுவதாகச் சொல்லும் சிறப்பு சுயாட்சியை ஏற்பதா தனி நாடாகப் பிரிந்து செல்வதா – என்பதைத் தீர்மானிக்கிற பொதுவாக்கெடுப்பில் நான்கரை லட்சம் கிழக்கு திமோர் பிரஜைகள் பங்கேற்றனர்.

அந்தப் பொதுவாக்கெடுப்பை சர்வதேசம் கண்காணிக்கக்கூட இந்தோனேசியா முட்டுக்கட்டையாய் இருந்தது. ‘மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நானே நடுநிலையோடு விசாரித்துக் கொள்வேன்’ என்று இப்போது திருவாளர் இலங்கை சொல்வதைப் போலவே அப்போது இந்தோனேசியா பேசியது. ‘பொதுவாக்கெடுப்பை நேர்மையாகவும் நியாயமாகவும் நானே நடத்திக் கொள்வேன்’ என்றது. ஆக சர்வதேசத்தின் முழுமையான பங்களிப்பு இல்லாத நிலையில்தான் கிழக்கு திமோர் பொது வாக்கெடுப்பு நடந்தது.

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில் நடந்த அந்தப் பொதுவாக்கெடுப்பின் முடிவை சுயாட்சி – சுய அதிகாரம் – மானியம் என்றெல்லாம் இந்தோனேசியா கொடுத்த வாக்குறுதிகள் தீர்மானிக்கவில்லை…..
கிழக்கு திமோர் இளைஞர்கள் சான்டாகுரூஸில் சிந்திய ரத்தமும் சாவைக் கண்டு அஞ்சாத விடுதலை வீரர்களின் ஓர்மமும்தான் தீர்மானித்தது அந்தப் பொதுவாக்கெடுப்பின் முடிவை!

‘ஒன்றுபட்ட இந்தோனேசியாவுக்குள் சுயாட்சியுள்ள மாகாணம்’ – என்கிற மோசடியை 78.5 சதவிகித வாக்காளர்கள் நிராகரித்தனர். ஆக்கிரமிப்பு இந்தோனேசிய ராணுவத்தின் முற்றுகைக்குள் இருந்தபடியே ‘சுதந்திர கிழக்கு திமோர் என்கிற தனி நாடு தான் எங்களுக்குத் தேவை’ – என்று தெள்ளத்தெளிவாகத் தீர்மானித்தனர்.

இந்தோனேசியாவை அது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுதந்திர வேட்கை கொண்டவர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடத் தொடங்கியது. 1400 அப்பாவி கிழக்கு திமோர் பிரஜைகள் அந்த அரச வன்முறைக்கு பலியாக நேர்ந்தது. அதன்பிறகே அங்கிருந்து வெளியேறியது இந்தோனேசிய ராணுவம். இதெல்லாம் தாய்மண்ணின் விடுதலைக்காக கிழக்கு திமோர் கொடுத்த விலை.

தங்கள் தந்தையரையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் கொன்றுகுவித்துவிட்டு ‘உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் பிச்சையாகப் போடுகிறோம்’ என்று திமிரோடு அறிவித்த இந்தோனேசியாவை கிழக்கு திமோர் மக்கள் திருப்பியடித்த வரலாறு இது.

திமோர் தீவின் கிழக்குப் பகுதியான கிழக்கு திமோர் இன்று இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடுகளில் ஒன்று. ஒரு தீவு இரு நாடு – என்பதற்கான இந்த நூற்றாண்டுச் சான்று.

திமூர் – என்பதற்கு மலேசிய இந்தோனேசிய மொழிகளில் கிழக்கு என்று அர்த்தம். அந்த வார்த்தை வாயில் நுழையாத நிலையில் போர்த்துகேயர் – அதை ‘திமோர்’ ஆக்கினர். கிழக்கு திமோர் – என்று குறிப்பிடும்போது ‘கிழக்கு கிழக்கு’ என்றே ஆகிவிடுவதால் சுதந்திரம் பெற்றபின் ‘திமோர் லெசுடே ஜனநாயகக் குடியரசு’ என்கிற கம்பீரமான பெயரைத் தாங்கியிருக்கிறது அது. இப்போது அதன் மக்கள்தொகை ஏறக்குறைய 12 லட்சம்.

கிழக்கு திமோரின் தேசிய கீதம் ‘தந்தையர் நாடு’ (fatherland) என்றே தொடங்குகிறது. ‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்கிற மகாகவி பாரதியின் விருப்பத்தை எதிரொலிக்கிறது அது.

1919ல் எங்கள் சீக்கியச் சகோதரர்களுக்கு ஜாலியன் வாலாபாக்கில் என்ன நடந்ததோ 1991ல் கிழக்கு திமோர் இளைஞர்களுக்கு சான்டாகுரூஸில் என்ன நடந்ததோ அதுதான் 2009ல் முள்ளிவாய்க்காலில் எங்கள் உறவுகளுக்கு நடந்தது. ஒரே இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன் கூடிய சமாதான சுகவாழ்வு – என்கிற வார்த்தைக் குப்பைகளுக்குள் முள்ளிவாய்க்காலுக்கான நீதியை ஒளித்துவைக்க யாராலும் முடியாது. கிழக்கு திமோர் அதற்கு ஒரு வலுவான உதாரணம்.