யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கு இலவச சத்திரசிகிச்சை(காணொளி)

396 0

thellippalai-hospitalயாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 30 பேருக்கான இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது.

கடந்த காலப் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட 30 பேருக்கு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலையில் இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்காக பதிவு செய்த 50 பேரில் 30 பேருக்கான சத்திர சிகிச்சை கடந்த 3 நாட்களாக நடைபெற்று இன்று நிறைவுபெற்றதாக கொழும்பு கொட்டாஞ்சேனை லயன்ஸ் கழக உறுப்பினரும் ஏற்பாட்டாளருமாகிய வைத்தியக் கலாநிதி அமுதா கோபாலன் தெரிவித்துள்ளார்.

இலவச பிளாஸ்ரிக் சத்திர சகிச்சைக்கு பதிவு செய்தவர்களில் முதற்கட்டமாக இலகுவாக நிறைவேற்றக்கூடிய சிறிய பாதிப்புக்குட்பட்டவர்களாகிய 30 பேருக்கு சத்திர சிகிச்சை கடந்த 3 நாட்களில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வருகை தந்த 3 சத்திரசிகிச்சை நிபுணர்கள், 3 மயக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் 3 தாதியர்கள் வருகை தந்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

எரி காயங்கள் மற்றும் கூடுதலான பாதிப்புக்குள்ளானவர்களுக்கான சத்திரசிகிச்சை அடுத்த வருட ஜனவரி மாதம் சத்திர சிகிச்சை குழு ஒன்று வருகை தந்து ஏனையோருக்கான சத்திரசிகிச்சைகளை செய்யும் என சத்திரசிகிச்சைக் குழுவுடன் வருகை தந்த தாதியர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பளை வைத்தியசாலையின் தாதியர்களும் இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு வருகை தந்த சத்திரசிகிச்சை குழுவினருக்கான உதவிகளை வழங்கியிருந்தனர்.