இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு

315 0

imagesஇந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் நாற்பத்தொரு இலங்கைத்தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பவுள்ளனர்.

எதிர்வரும் 17ஆம் திகதி தென்னிந்தியாவின் திருச்சியில் தங்கியிருந்த 13 குடும்பங்கள் விமானத்தின் மூலம் இலங்கை திரும்பவுள்ளனர்.

தாயகம் திரும்பும் அகதிகளில் மன்னார், வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 அகதிகளில் 22 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

2011ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 1905 குடும்பங்களைச் சேர்ந்த 5225 இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக  மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயகம் திரும்பவுள்ள அகதிகளுக்கான இலவசமாக விமான பயணச்சீட்டு ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதுடன் மீள்சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பணநன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுகின்றது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதியும் ஒரு தொகுதியினர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.