யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு சிப்பாய் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவின் விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் சென்று கடந்த சனிக்கிழமை முதல் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து வருகின்றது.
இதற்கமைய கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த தமிழ் சிப்பாய் இந்திரகுமாரன் கபிலோசன், அவரது சகோதரர் இந்திரகுமாரன் நிரூசன் மற்றும் திருச்செல்வன் பிரபூஷன் ஆகியோர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நிறுத்தப்பட்டதை அடுத்தே அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினமும் கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என இதுவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவின் விசேட குழுவினரால் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஆறு பேர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாகக் கூறி இராணுவ பொறியியல் பிரிவு சிப்பாய் இந்திரகுமாரன் கபிலோசன் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், இராணுவ சேவையில் பணியாற்றும் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.