அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததன் காரணத்தினால்
அவரை பதவியிலிருந்து நீக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு அவர் நேற்று வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அது தொடர்பில் ஆராய சட்ட குழுவொன்றை நியமித்தேன். அந்த குழு அர்ஜுன மகேந்திரன் தவறு செய்ததாக கூறியிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறவில்லை. பின்னர் அது பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஒன்றுமில்லை என கூறிவிட்டனர்.பின்னர் நீதி மன்றம் சென்றனர். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் பாராளுமன்றம் இதனை தேடிப்பார்க்க வேண்டும் என்றும் கூறினோம்.
தற்போது பாராளுமன்றம் கோப் குழுவினூடாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அவரை பதவி விலக்க முடியாது. நாம் யாரையும் பாதுகாக்கவில்லை. எனினும் தன்னை விடுவிக்குமாறு அவர் கோரியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவற்றை நிரூபிக்க முடியவில்லை, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.