அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து கலிபோர்னியாவில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
அதேசமயம், அதிருப்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிக்காட்ட தொடங்கி உள்ளனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்திய சிறிது நேரத்தில், கலிபோர்னியா சான்டா பார்பரா பல்கலைக்கழகம் அருகில், எதிர்ப்பு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘என்னுடைய ஜனாதிபதி இல்லை, என்னுடைய ஜனாதிபதி இல்லை’ என்று முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெஸ்ட்வுட் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்லாந்தில் நடந்த போராட்டம் காரணமாக விரைவு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அவர்கள் டிரம்பை வாழ்த்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.