எழும்பூர் ரெயில் நிலையத்தில் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன்

368 0

201611100920015172_chennai-egmore-railway-station-commission-to-pay-100-rupees_secvpfசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சில்லரை தட்டுப்பாட்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் 500 ரூபாய்க்கு சில்லரை கொடுக்க 100 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ரெயில் நிலையங்களிலும், பஸ்களிலும் இந்த நோட்டுகள் செல்லும் என்பதால் நேற்று சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

இதனால் டிக்கெட் கவுன்ட்டர்களில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கவுன்ட்டர்களில் இருக்கும் சில்லரையும் தீர்ந்ததால் பயணிகளுக்கு சில்லரை கொடுக்க முடியாமல், கவுன்ட்டர்களில் சில்லரை இல்லை என்று கூறினர். அதனால் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தனர்.

இதனால் டிக்கெட் கொடுப்பவருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்பு போலீஸ் பாதுகாப்புடன் டிக்கெட் கவுன்ட்டர்கள் நேற்று செயல்பட்டது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் 500 ரூபாய்க்கு, 100 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு சில்லரை கொடுத்தனர். பயணிகளும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் கமிஷன் கொடுத்து சில்லரை வாங்கினார்கள்.

இதுகுறித்து அரியலூரை சேர்ந்த ஆசிரியர் அகிலா கூறும்போது, ‘நான் சென்னையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது உறவினர் ஒருவருக்கு நாளை திருமணம் நடைபெற இருப்பதால் நான், என் குடும்பத்துடன் எனது ஊருக்கு செல்கிறேன். நான் டிக்கெட் கவுன்ட்டர்களில் 1,000 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டேன். ஆனால் சில்லரை இல்லை என்றுக்கூறி டிக்கெட் தரவில்லை. அதன்பின்பு நண்பர் ஒருவரிடம் சில்லரை வாங்கி டிக்கெட் எடுத்தேன்’ என்று கூறினார்.

இதேபோல் காரைக்குடியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கூறும்போது, ‘நான் சென்னையில் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி சர்மிளா. எங்களுக்கு அஸ்வின் என்ற ஒரு மகன் உள்ளான். நாங்கள் எனது மனைவியின் இரண்டாவது பிரசவத்திற்காக எனது சொந்த ஊரான காரைக்குடிக்கு செல்கிறோம். டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரமாக வரிசையில் நிற்கிறேன். ரெயிலுக்கு நேரம் ஆகிவிட்டது. ஆனால் சில்லரை இல்லை என்று கூறி எனக்கு டிக்கெட் தர மறுக்கிறார்கள். பிரதமர் மோடி அறிவித்து உள்ளது பாராட்டத்தக்க வேண்டிய செயல், ஆனால் திடீரென அறிவித்ததால் தான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

நேற்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் மர்ம நபர்கள் பெண் காவலர் ஒருவரிடமே 500 ரூபாய்க்கு சில்லரை கொடுப்பதற்கு 100 ரூபாய் கமிஷன் பெற்றது குறிப்பிடத்தக்கது.