‘ஆவா’ பின்னணியில் விடுதலைப் புலிகளாம்

263 0

1109759633untitled-1வடக்கை அச்சுறுத்தும் ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளதாகவும், அவர்களது ஆலோசனைகளுக்கு அமைவாகவே அக்குழு செயற்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை அதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார, கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் மேற்படி விடயம் உள்ளடங்கிய அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூன்று சந்தேகநபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர் செய்த பின்னரே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை புரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது வடக்கில் கடமையில் ஈடுபட்டுள்ள உளவுத் துறையினர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்படுகின்றனர்.

கூர்மையான ஆயுதங்களால் வெட்டி காயம் ஏற்படுத்தும் இந்த குழு அச்செயற்பாடு ஊடாக மக்களை பயமுறுத்தி அவர்களது சொத்துக்களைக் கொள்ளையிடுதல் உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் பயங்கரவாத புலனாயவுப் பிரிவுக்கு விசாரணை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிலையில் 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 6(1) ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக விசேட விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

அந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மூவரை நாம் கடந்த நவம்பர் 5ஆம் திகதி கைது செய்தோம்.

கே.கே.எஸ். வீதி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த குட்டி எனப்படும் சிவலிங்கம் கமலநாத், யாழ். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந் எனப்படும் அன்டன் தாய்சஸ் அரவிந் அலக்ஸ், தெந்தாதரன் பிருந்தவன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டனர். அதன்பின்னரே இன்று (நேற்று) அவர்களை மன்றில் ஆஜர் செய்கின்றோம்.

இந்த சந்தேகநபர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுடன் தொடர்பினை பேணி அவர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புக்கு அமைவாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி, அந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்டு, வாள், கத்தி உள்ளிட்ட அபாயகரமான கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உள்ளாக்கும் விதமாக செயற்பட்டுள்ளனர்.

இதற்காக உதவியுள்ள இவர்கள் வடக்கில் கடமையில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அந்த பிரதேசத்தில் சேவையாற்றும் பொலிஸார் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடமையைச் செய்ய இடையூறு ஏற்படுத்தியமை, மக்களை பயமுறுத்தியமை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, கூரிய ஆயுதங்களால் வெட்டியும் கொத்தியும் காயம் ஏற்படுத்துகின்றமை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவற்றின் ஊடாக பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் சட்ட விரோத செயற்பாட்டினை சந்தேகநபர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் செய்யப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஆவா எனும் குறித்த குழுவில் தற்போது 30 உறுப்பி­னர்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பினராக இருந்துகொண்டு யாழ்ப்பாணம், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடமையில் ஈடுபடும் உளவுத் துறை உத்தியோகத்தர்களை வாளால் வெட்டி காயம் ஏற்படுத்தியமை, சுன்­னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியமை, அப்பிரதேசத்தின் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுதல், கொள்ளை ஆகிய செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த ஆவா எனும் அமைப்பு யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியில் பொது மக்களிடையே இனம் மற்றும் மத ரீதியிலான வேறுபாடுகளைத் தூண்டி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் வண்ணம் மக்களை தூண்டியுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

அதனால் இந்த அமைப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களைக் கைது செய்வதற்கும், அவர்கள் பயன்படுத்தும் வாள், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுக்கு மேலதிகமாக புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பின் அவற்றைக் கைப்பற்றவும் சிறப்பு விசாரணைகள் தொடர்கின்றன.

அதனால் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனைய கைதிகளில் இருந்து இவர்களை வேறுபடுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோருகின்றோம்”

என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.