கிராமங்களிலும் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது – மைத்திரிபால

222 0

நகரங்களில் மட்டுமன்றி, கிராமங்களிலும் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியதொரு காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

நகரம் முதல் சிறிய கிராமம் வரை, அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் பாவனை தலைத்தூக்கியுள்ளது. இதனால், எத்தனை பேரின் வாழ்க்கை அழிவடைந்துள்ளது என்பதை நாம் அவதானித்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஒருகாலத்தில் போதைப்பொருள் நகரத்தில் மட்டும்தான் பாவனையில் இருந்தது. இன்று, கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

இவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான முழுமையான தெளிவுக் கிடையாது. இதனை பெற்றோர்தான் அவதானத்தில் எடுக்க வேண்டும்.

இதிலிருந்து விடுபட விளையாட்டுக்களில் மாணவர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். இதற்கான ஆலோசனைகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.