தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து ரிமோட்’ மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர் இந்த கோர சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் ராணுவவீரர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அப்பாவி மக்களை குறிவைத்து பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் உள்ள லாபுலே என்ற நகரில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்திருந்தனர். அந்த சாலையில் மினி பஸ் ஒன்று வந்தபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் `ரிமோட்’ மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடிப்பில் சிக்கிய அந்த பஸ் சிறிது நேரத்தில் தீயில் கருகி முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த கோர சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.