யாழில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி

331 0

மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப்பொருளில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடலும் யாழில் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியும் கலந்துரையாடலும் எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மேல்மாடியில் அமைந்துள்ள பிரார்த்தனை மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை என இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன.

இக்கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நூலக நிறுவனத்தினரால் யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட நூலக நிறுவன பிரதிநிதிகள், “வரலாற்றுப் பெறுமதி வாய்ந்த எங்களுடைய நூல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனைப் பாதுகாப்பதற்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியது மிக மிக அவசியமானது.

அந்த அடிப்படையில் நாங்கள் ஒரு முயற்சியை எடுத்து இருக்கின்றோம். இதேபோன்று நடவடிக்கைகளை ஏனையவர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், நாம் முன்னெடுத்துள்ள இந்தச் செயற்பாட்டிற்கு அனைத்து தரப்பினர்களும் தமது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

எமது வரலாறுகள், அடையாளங்கள் அழிவடைந்ததும் மறைக்கப்பட்டும் வருகின்ற நிலையில், ஆவணப்படுத்தல் என்பது முக முக்கியமானது. அத்தகைய ஆவணப்படுத்தல் என்பதை மேற்கொண்டு இதனூடாக எமது இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த வரலாறுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் இதில் கலந்துகொள்ள வேண்டும் அதேபோல ஏனைய அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்று கோருகின்றோம்.