இனப்பிரச்சினை தீரும் வரை உலக நாடுகளின் தலையீடு கட்டாயம் வேண்டும்- மாவை

265 0

47 நாடுகளினாலும் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை முற்றாக எதிர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை உலக நாடுகளின் தலையீடு இங்கு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது.

பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளதால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப்போகின்றன. அரசாங்கம் சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப்போகின்றது.

அத்துடன் அரசாங்கம் விலகப்போகும் பிரேரணையானது மனித உரிமைப் பேரவையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பாக கூடுதல் கவனஞ்செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும்” என்று கூறினார்.