அரசாங்கம் தயாரித்துவரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், வளர்ச்சி மயமானது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் தயாரித்துவரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், வளர்ச்சி மயமானதாகவும் கடந்த பல வருடகால குறைபாடுகளில் கவனஞ்செலுத்துவதாகவும் இருக்கும் என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர், இந்த அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த வரவு – செலவுத் திட்டம், குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் மக்களுக்கு நன்மையளிக்கும் பொருளாதாரத்துறை அனைத்தையும் கவனத்தில் எடுப்பதாக அமையும் என்று அவர் கூறினார்.
எனினும், அரசாங்கம் இறுக்கமான நிதிக் கட்டுபாடுகளைக் கடைப்பிடித்து, நிதி உறுதிப்பாட்டில் கவனம் செலுத்தவும் வரவு – செலவுத் திட்ட குறைபாட்டைக் குறைக்கவும் முடிந்துள்ளதாக கூட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டளவில், வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டு இதை 4.7 சதவீதமாகக் குறைக்கலாம் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
2016 இல் இது 5.4 சதவீதமாக இலக்குவைக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டில், 56.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015இல் 82.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.
செலவு என்ற வகையில், இலங்கை புதிய தோற்றப்பாட்டைக் கொண்டுள்ளது.
அரச செலவில் பெருமளவு செலவு மானியங்கள் மற்றும் சமூகநலன் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருட வரவு – செலவுத் திட்டத்தில், சமூக நலன்புரி சேவைகள் மற்றும் 380 பில்லியன் ரூபாய் அளவில் மானியங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில், நாளை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், சனிக்கிழமை அடங்கலாக டிசெம்பர் 10ஆம் திகதி வரை இரண்டாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.