பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் குருநாகல் – நிக்கவரட்டிய பகுதியிலுள்ள பள்ளிவாசக்கு விஜயம் செய்துள்ளார்.
நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு நேற்று முன்தினம் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விடயங்களை ஆராய்வதற்காகவே அவர் அந்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் நேற்றிரவு இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் பள்ளிவாசலுக்கு இவ்வாறான அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதினை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமை குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தமக்கு வருத்தமளிப்பதாகவும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல் நடாத்தப்படாதிருப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உறுதியளித்துள்ளார்.
நிகவரட்டிய பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும், இந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சில இனவாதிகள் இவ்வாறான நாசக்கார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.