விம்பிள்டன் டென்னிஸ்- முகுருஜா அதிர்ச்சி தோல்வி

2086 0

201607010354320652_Garbine-Muguruza-runs-out-of-steam-at-Wimbledon-in-shock_SECVPF (2)விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் முகுருஜா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி பிரான்சின் ஜுலியன் பென்னட்டுவை தோற்கடித்தார். கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் தன்னை எதிர்த்த இத்தாலியின் ஆன்ட்ரீஸ் செப்பியை 7-6 (5), 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 2 மணி நேரத்திற்குள் செப்பியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ராவ்னிக் 25 ஏஸ் சர்வீஸ்களை போட்டு அட்டகாசப்படுத்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் யென் ஹூசுன் லுவை (சீனத்தைபே) எளிதில் வீழ்த்தினார்.

மரின் சிலிச் (குரோஷியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), நிகோலஸ் அகுத் (பிரான்ஸ்) உள்ளிட்டோரும் இரண்டாவது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வி நேற்று நிகழ்ந்தது. சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் மகுடத்தை வென்றவரான உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 124-ம் நிலை வீராங்கனையான சுலோவக்கியாவின் ஜானா செபெலோவாவை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் முகுருஜா 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் மண்ணை கவ்வினார். 58 நிமிடத்திற்குள் செபெலோவாவிடம் பணிந்து போய் விட்டார். கடந்த ஆண்டு விம்பிள்டனில் இறுதிசுற்று வரை வந்த முகுருஜா இந்த முறை அதிகமான தவறுகள் இழைத்ததால் 2-வது சுற்றோடு நடையை கட்ட வேண்டியதாகி விட்டது.

அவரை வீழ்த்திய 23 வயதான செபெலோவா கூறும் போது, `இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் இன்று சிறப்பாக ஆடினேன். வெற்றிக்கு நான் தகுதியானவள். ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கு முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இருந்தேன். விம்பிள்டனில் எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு’ என்றார்.

மற்றொரு ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி மூத்த வீராங்கனையான பிரான்செஸ்கா சிவோனை துவம்சம் செய்து 3-வது சுற்றை எட்டினார்.

முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா),  ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), லிசிக்கி உள்ளிட்டோரும் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

Leave a comment