அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும், சகல தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனவும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முன்னாள் தலைவரான மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குதல், அதிகாரப் பகிர்வு மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இருப்பினும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில், சகலரினதும் உரிமைகள் நிலைநாட்டும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.