நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு!

332 0

npc-02-11-15-1நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை நடாத்திய மாகாண சபை குழு சபையில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

வடமாகாணத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நெல்சிப் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்திட்டத்தின் ஊடாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க என மாகாண சபையினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவில் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களாக அரியரட்ணம் , சிவயோகன் மற்றும் இந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டு அக் குழு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனது விசாரணைகளை முன்னெடுத்தது.

அந்நிலையில் 23 மாதங்களுக்கு பிறகு விசாரணை அறிக்கையை சபையில் அக்குழு சமர்ப்பித்தது. அதன் போது குறித்த ஊழலில் தனியே பொறியியலாளர் மாத்திரம் சம்பந்தப்படவில்லை ,, பல அதிகாரிகளும் தொடர்பு பட்டு இருப்பது தமது விசாரணை ஊடாக கண்டறிந்து கொண்டதாக அக்குழு தெரிவித்தது.

விசாரணைக்கு அதிகாரி உதவவில்லை. -அரியரட்ணம்.

விசாரணைக்கு முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் உதவவில்லை எமக்கு ஒரு கதிரை கூட தரவில்லை. உதவிக்கு ஒரு அதிகாரியை கேட்டு இருந்தோம் அந்த உதவியும் செய்யவில்லை. எமது விசாரணைகளுக்கு முட்டுக் கட்டையாக இருந்தார்.பின்னர் அவர் மாற்றப்பட்டு புதிதாக வந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளரே விசாரணைக்கு உதவினார். என அக்குழுவை சேர்ந்த ஆளும் கட்சி உறுப்பினர் ப. அரியரட்ணம்  தெரிவித்தார்.

நிதிக்குற்ற பிரிவிடம் முறையிடுவோம். – சிவாஜிலிங்கம்.

நிதி மோசடி பிரிவிடம் முறையிடுவோம். இந்த மோசடியில் ஈடுபட்ட சிலர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக தெரிய வருகின்றது. அவர்களை சர்வதேச பொலிஸ் உதவியுடன் கைது செய்யப்பட வேண்டும். ஊழல் செய்தவர்கள், துணை போனவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். – சி.வி.

தற்போது தான் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளது. இதன் ஊடாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதிமன்ற உதவியை நாடி அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்கள் எங்களை ஏளனம் செய்கிறார்கள். – சுகிர்தன்.

இரண்டு வருடமாக விசாரணை செய்து என்னத்தை கிழித்தீர்கள் என மக்கள் எம்மை பார்த்து கேட்க கூடாது. ஊழல்கள் தொடர்பில் அதிகாரிகள் தகவல் தர மறுக்கின்றார்கள். உங்களிடம் தந்து என்ன பயன் என கேட்கிறார்கள். நாம் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டித்து இருந்தால் இந்த கேள்விகள் எழாது.

குற்றவாளிகள் தண்டிக்கபப்ட்டால் தான் பயம் வரும். இல்லாவிடின் குற்றவாளிகள் சொல்வார்கள் இவர்களின் விசாரணையால் என்னத்தை இவர்களால் கிழிக்க முடிந்தது எனஅவைத்தலைவர் இந்த உயரிய சபையில் உயரத்தில் இருந்தும் மாநகர சபையின் ஊழல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது. சபையில் ஊழல் தொடர்பில் கதைக்கும் போது என் போன்றவர்கள் என்ன செய்ய முடியும்.

மக்கள் எங்களை பார்த்து ஏளனம் செய்கிறார்கள். இவர்கள் விளையாட்டு போட்டிகளுக்கு விருந்தினராக வருவதை தவிர இவர்களால் என்னத்தை செய்ய முடியும் என கேட்கிறார்கள். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை சட்ட வலுவானதா ? அஸ்மீன் கேள்வி

இந்த விசாரணை அறிக்கை சட்டவலு உள்ளதா ? இந்த விசாரணை அறிக்கையை குற்றப் பத்திரமாக நீதிமன்றில் தாக்கல் செய்ய முடியுமா ? எனும் கேள்விகள் உள்ளன.

இந்த திட்டம் மஹிந்த அரசின் காலத்தில் பஸில் ராஜபக்சேவின் அமைச்சின் கீழ் ஆனது எனவே இந்த மோசடி குறித்து நாம் நிதி மோசடி பிரிவிடம் முறையிட வேண்டும்.  அதனை விடுத்து விசாரணை அறிக்கையை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருப்பதனால் எதுவும் ஆக போறதில்லை. என ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்தார்.

கணக்காய்வு நாயகத்திற்கு இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்போம். என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். இதற்கு சிவாஜிலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையில் , மோசடி இடம்பெற்று உள்ளது. அதனை கணக்காய்வு நாயகத்திற்கு அனுப்புவதனை விட உடனடியாக யாழ். காவல் துறை பெருங்குற்ற பிரிவில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். என தெரிவித்தார்.

அதனை அடுத்து சபையில் விசாரணை அறிக்கையை கணக்காய்வு நாயகத்திற்கும் நிதி மோசடி விசாரணை குழுவிடமும் கையளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.