திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற முன்னாள் போராளியொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். நடராஜா சபேஸ்வரன் என்றழைக்கப்படும் குறித்த முன்னாள் போராளியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகள் பலருக்கு பயிற்சி வழங்கினார் என இவர்மீது பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா சபேஸ்வரன், இன்றையதினம் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, தமிழீழ விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயன்றார் எனவும், இவர் பலருக்கு பயிற்சி வழங்கியுள்ளார் எனவும் தமக்கு இவரிடம் பயிற்சி பெற்ற ஒருவர் தெரிவித்ததாகவும் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா என நீதிபதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வினவினார்.
இதன்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கால அவகாசம் கோரியதையடுத்து நீதிபதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தார்.