சென்னையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தேர்தல் முன்னணி நிலவரங்களை அறிவித்த போது மாணவ-மாணவிகள் கைதட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அடையாறு நட்சத்திர ஓட்டலில் அகன்ற திரையில் நேரடியாக தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பபட்டது.
தேர்தல் முடிவை அறிந்து கொள்வதற்காக முக்கிய பிரமுகர்கள், பல்வேறு துறை வல்லுனர்கள், மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். அவ்வப்போதைய முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
அமெரிக்க தேர்தல் நடைமுறைகள், வாக்கு எண்ணும் முறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இடையிடையே மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகளும் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது.டிரம்பும், ஹிலாரியும் மாறி மாறி முன்னணியில் வந்து கொண்டிருந்தனர். முன்னணி நிலவரங்களை அறிவித்த போது கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நடிகர் நாசர் தேர்தல் முடிவை பார்க்க வந்திருந்தார்.
தேர்தல் முடிவு குறித்து நடிகர் நாசர் கூறியதாவது.
யார் வெற்றி பெற்றாலும் அவ்வப்போது உலக நாடுகளில் ஏற்படும் சூழ்நிலையை பொறுத்து தான் முடிவுகளை வரையறுக்க முடியும். அமெரிக்கா வேறு நாடு. அங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் வேறு. டிரம்ப் பரபரப்பாக பேசியது தேர்தல் நேரத்தில் நமது நாட்டு அரசியல்வாதிகளை போன்று அங்குள்ள மக்களை கவருவதற்காக பேசியிருக்கலாம். ஆனால் அவர் சொன்னதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பிலிப், மின், பி.ஏ.ஓ. அரியல் போலாக் ஆகியோர் செய்திருந்தனர்.