சுங்கச் சாவடியில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க முடியாததால் அனைத்து வாகனங்களையும் ஊழியர்கள் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.மதுரவாயல் சுங்கச்சாவடியில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. காருக்கு ரூ.30, மினி லாரி, வேனுக்கு ரூ.45, லாரி- பஸ்சுக்கு ரூ.100 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் சுங்க கட்டணத்திற்கு தங்களிடம் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகளை ஊழியர்களிடம் கொடுத்தனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இன்று முதல் புழக்கத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுங்கச் சாவடியில் இருந்த ஊழியர்கள் அவற்றை வாங்க தயங்கினர். மேலும் அவர்களிடம் சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு உருவானது. இதன் காரணமாக மதுரவாயல் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கச் சாவடியில் பணம் வசூலிக்காமல் அனைத்து வாகனங்களையும் ஊழியர்கள் இலவசமாகவிட்டனர். இதன் பின்னரே போக்குவரத்து நெரிசல் சீரானது.