முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரில் 49-வது நாளாக சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி அறிந்து கொள்ள தினமும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்று விசாரித்து வருகின்றனர்.
இன்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டிஅளித்த போது அவர்கூறியதாவது:-
ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டிலே ஒரு சில பேரை சந்தித்து , மரியாதை நிமித்தமாக ஒருசில பேரை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டதில், முதல் நபராக இருந்தவர், நம்முடைய தமிழக முதல்வர் ஜெயலலிதா.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனாலும் கூட எங்களுடைய தலைவர் அமித்ஷா அவர்கள் வந்தபோது, நானும் உடன் வந்திருந்தேன். ஆனால் இன்றைக்கு தனிப்பட்ட முறையில் என் சார்பாக நேரிலே வந்து நலம் விசாரிப்பதற்காக இங்கு வந்தேன்.
இங்கு மருத்துவமனையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது மாத்திரமல்ல, குறிப்பாக இந்த அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியையும் சந்தித்து, மருத்துவ ரீதியாக பல விவரங்களை தெரிந்துக்கொண்டேன்.
ஒரு நல்ல ஆறுதலான ஒரு செய்தி என்னவென்றால், முதல்-அமைச்சருக்கு தந்த சிகிச்சை நல்ல முறையிலே பலனளித்து, கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண, இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அனேகமாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அனேகமாக மருத்துவமனையை விட்டே அவர் இல்லம் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நல்ல செய்தியை கேட்ட பிறகு அந்த மகிழ்ச்சியை நானும் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.
பூரணமாக குணமடைந்து கோட்டையிலே வந்து கோப்புக்களை எல்லாம் பார்க்கக் கூடிய அளவிற்கு நல்ல நலம் பெற வேண்டும் என நான் மனபூர்வமாக ஆண்டவனிடம் பிராத்தனை செய்கின்றேன்.
கேள்வி:- ஜெயலலிதா சாதாரன அறைக்கு மாற்றப்பட்டாரா?
பதில்:– இன்றைய திகதியிலே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொண்டிருந்தாலும், விரைவிலேயே அதிலிருந்து மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது மருத்துவக்குழுவின் கணிப்பு. அதுவே மகிழ்ச்சிக்கரமானது. மாற்றம் என்பது, பல காரணத்துக்காக தீவிர சிகிச்சை பிரிவிலே இருக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவு என்பதே, தொற்று மற்றவர்களால் ஏற்படாமல் இருக்கவே பாதுக்காக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.