அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்துவேன்- டிரம்ப்

265 0

201611091349085439_trump-says-that-he-will-double-us-economy_secvpfஅமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்று நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அமெரிக்காவின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை செயல்படுத்தலாம்.

நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைக்கும், அமெரிக்காவுடன் நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.