சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்

3967 0

201607010757059893_TN-government-should-decide-mayor-deputy-mayor-councilors-to_SECVPFசென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் தகுந்த முடிவினை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:‘ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், மாநில முதல்-அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகின்றன. ஆனால், இதுபோல, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத சம்பளம் வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கும், சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த 2013-ம் ஆண்டு மனு கொடுத்தேன்.

இந்த மனுவுக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், ‘சென்னை நகர முனிசிபல் சட்டம் பிரிவு 25-ஏ-வின் படி மேயர் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த சட்டப்பிரிவு ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால், அதை ரத்து செய்யவேண்டும். மேயர் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்க உத்தரவிடவேண்டும்’. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் ஒரு வக்கீல். அவர் வாக்காளர் என்ற முறையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதுவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை போல, சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலருக்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால், இது சட்டசபையில் முடிவு செய்ய வேண்டிய விவகாரம். மேயர் உள்ளிட்டோருக்கு சம்பளம் கொடுக்காதது, அரசியலமைப்பு சட்டத்தை மீறியது என்று கூற முடியாது. இவர்களுக்கு சம்பளம் கொடுப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Leave a comment